காக்கை குருவி நமது சாதி -பிரபஞ்சன்



கண்ணாடிப் பாத்திரம் தரையில் விழுந்தது போல உடைந்து சிதறிக் கிடக்கிறது, புதுச்சேரி. கடந்த அறுபது எழுபது ஆண்டுகளுக்குள் பிறந்து வாழ்ந்த தலைமுறையினர்க்கும் புயல் இப்படியும் இருக்கும் என்று புதிய போதனையை நிகழ்த்தி இருக்கிறது, இந்தப் புத்தாண்டு கொண்டு வந்து போட்டிருக்கிற புயல். மழையை நாங்கள் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால், சிறிய பெரிய வலிய காற்றுகளை நாங்கள் புயல்கள் என்று கொஞ்சம் அசிரத்தையாகவும் ஏன் அலட்சியமாகக்கூட நினைத்துக் கொண்டிருந்தோம். மண்ணின் மேல் உள்ள எதையும் புயல் புரட்டிப் போடும் என்று நேரில் இப்போதுதான் கண்டோம். காரிலோ, இரு சக்கர வாகனங்களிலோ புதுச்சேரியைச் சுற்றிப் புயலின் வந்து போன சுவடுகளைச் சுற்றிப் பார்க்க முயன்று நானும் நண்பர்களும் தோற்றுத்தான் போனோம். தெருவின் குறுக்காக, வீடுகளுக்கு முன்னும் பின்னும், வீடுகளின் மேலேயும் விழுந்து கிடந்தன மரங்கள். ஊரைச் சுற்றி நடக்கத்தான் முடிந்தது. கூரை வேய்ந்த வீடுகள் அனைத்தும் தலை இழந்து நிற்கின்றன. மண் சுவர்கள் இற்றுச் சரிந்து கிடக்கின்றன. வலிவான கல் கான்கிரீட் வீடுகள் மட்டுமே பிழைத்துக் கிடக்கின்றன. மக்கள் திகிலில் உறைந்திருந்தார்கள். மின்சாரம் சுத்தமாக இல்லை. ஆதி அனாதி கால இருட்டை, இருட்டு என்ன என்பதைப் புதுச்சேரி மக்கள் மூன்று இரவுகள் கண்டுணர்ந்தார்கள். தெருவோரம் பிளாட்பாரங்களிலேயே பல தலைமுறைகளாகக் குடும்பம் நடத்தியவர்கள் படும் துன்பம் அளவற்றது. புயல் சத்தம் என்ன என்பதை முதல் முறையாக நான் கேட்டேன். பல ஆயிரம் குழந்தைகள் ஏக காலத்தில் துடித்துப் போட்ட சத்தம் மாதிரிப் புயல் ஓலமிட்டது. மரண ஓலம் இதுவென்றே நினைத்தேன்.

காலூன்ற காய்ந்த தரை, நான்கு நாட்களுக்குப் பிறகே கிடைத்தது. புதுச்சேரி, மிக மோசமான சுற்றுச்சூழல் ஓம்பப்படும் நகரமாக இருந்தாலும் மரங்கள் அடர்ந்தே இருந்தன. அவை வெட்ட வெளியானது மட்டுமல்ல, செத்து விழுந்த கிடந்த காக்கைகளையும் இன்னும் சில பறவைகளையும் கண்டு பதைபதைத்துப் போனேன். தெரு நாய்களும் பூனைகளும் கூட செத்துக் கிடந்தன. தெரு முழுக்க இலைகள், தழைகள் சிந்திக் கிடக்கின்றன. எல்லாவற்றையும் விடவும் மோசமான நிலைமை, மக்கள் அச்சம் கொண்டு உலவுகிறார்கள். அச்சமற்ற தன்மைதான் விடுதலை என்கிறார் நீட்ஷே. எங்கள் விடுதலையை நான்கு நாட்கள் நாங்கள் இழந்து கிடந்தோம். இப்போதும் ஏழைகளே பெரும் துயர் அடைந்தார்கள்.

ங்கள் வீட்டு வாசலில் நிறைய தவளைகள் சேர்ந்துவிட்டன. உள்ளே செய்வதறியாது நான் முடங்கிக் கிடந்த வேளை. ஓட்டல்கள் திறக்கப்படவில்லை. உணவை, உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்துக் கிடந்தேன். என் மனைவி காலமான பிறகு, என் உணவுத் தேவை விடுதிகளை நம்பியே இருக்கிறது. வெளியே மழை காய்ந்த மண் தேடித் தவளைகள் பரிதவிக்கின்றன. என் மனம் தவளைகளால் நிரம்பிக் கிடக்கிறது. தண்ணீரிலும் தரையிலும் வாழ்பவை தவளைகள். நம்மைப்போலத்தான். சொர்க்கத்திலும் நரகத்திலும் வாழ்வது மாதிரி. எது சொர்க்கம் என்பதில்தான் குழப்பம். புயல் மழைக் காலங்களில்தான் நமக்கு ஞானரதம் வாய்க்கிறது (பாரதி கூட எங்கள் ஊரில் இருந்துகொண்டுதான் ஞானரதம் எழுதி இருக்கிறார்).

டோக்கியோவைக் காப்பாற்றிய தவளை என்று ஒரு கதை. ஜப்பானிய இலக்கியத்தில் சிறந்த எழுத்தாளராகக் கருதப்படும் ஹாருகி முரகாமி எழுதிய கதை. தன் காலத்தின் ஆன்மிக வறட்சியை எழுதிக் காட்டிய எழுத்தாளர் அவர். (ஜி.குப்புசாமி தொகுத்து, செழியன் மொழி பெயர்த்த கதை. வம்சி வெளியீடு).

தனியார் வங்கி ஒன்றின் கடன் வசூலிப்பாளர் கட்டாகிரி, அவர் அறையில் பெரிய தவளை ஒன்று உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார். அவர் திகைக்கிறார். டோக்கியோவை ஒரு பூகம்பம் தாக்க இருக்கிறது. பிப்ரவரி 18ம் தேதி. அதை ஏற்படுத்த இருப்பது ஒரு ராட்சஸப் புழு. அது, கட்டாகிரி வேலை பார்க்கும் அலுவலகத்துக்குக் கீழே தரைப்பகுதியில் பதுங்கி இருக்கிறது. அந்தப் புழுவை அழிக்கத் தவளை புறப்பட்டு இருக்கிறது. சமூக நலன் கருதி. கட்டாகிரி, இந்த யுத்தத்தின்போது, தவளைக்கு ஆன்மிகத் துணை இருக்கவேண்டும் என்று கேட்கவே தவளை வந்திருக்கிறது. தனக்குக் கராத்தே தெரியாதே என்கிறார் கட்டாகிரி. அதனால் என்ன, நீதிமான்கள் மனசால் ஒன்றை நினைத்து – அவர்கள் நல்லதையே நினைப்பார்கள். – உதவி செய்தால் போதும் என்கிறது தவளை. அவருடைய பெருந்தன்மையும் தியாகமும் கவனிக்கப்படாத, அங்கீகரிக்கப்படாத சமுதாயத்தில் அல்லவா வாழ்கிறார் அவர். அந்த வீரம் செறிந்த யுத்தத்துக்கு ஒப்புக் கொள்கிறார். டோக்கியோவைக் காப்பாற்ற வேண்டாமா என்ன? யுத்தம் நடக்க இருந்த இரவுக்கு முந்தைய மாலை, கட்டாகிரி மயக்கம் அடைந்து தெருவில் விழுந்து விடுகிறார். அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்க்கிறார்கள். மறுநாள் மருத்துவமனை அறைக்கே வந்து சேர்கிறது தவளை. உடம்பெல்லாம் வெட்டுக்காயம். கடைசியில் தன்னந்தனியாகவே தவளை அந்தப் பூகம்பப் புழுவைக் கொன்று விட்டதாகச் சொல்கிறது. ‘பியோதர் தஸ்தயேவ்ஸ்கி இணையில்லாத கருணையுடன், கடவுளால் கைவிடப்படுவோர் யார் என்கிற சித்திரத்தைத் தருகிறார். மனிதன் கடவுளைக் கண்டறிந்தான். அதே கடவுளால் கைவிடப்பட்டான். இங்குதான் அரிய மதிப்புள்ள மனித வாழ்வின் வலி மிகுந்த முரண்கள் இருக்கின்றன என்று அவர் கண்டறிந்தார். புழுவுடன் இருளில் சண்டையிடும்போது நான்   தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகளை’ எனக்கு நானே ஞாபகப்படுத்திக் கொண்டேன்’ என்கிறது கற்றறிந்த மேன்மைமிகு சிந்தையாளராகிய தவளை. தவளைக்கு உறக்கம் வருகிறது. உறக்கத்திலேயே அது செத்தும் போகிறது…

கட்டாகிரி இருந்த அறையில் வெளிச்சம் ஏற்றப்படுகிறது. நர்ஸ் அவரிடம் ‘மீண்டும் கனவா?’ என்கிறாள்.

‘ஆனால் அது தன் வாழ்க்கையே விலையாகக் கொடுத்துவிட்டது. அது போய்விட்டது. அது களிமண்ணுக்குள்ளேயே போய்விட்டதென்று நான் நினைக்கிறேன்.’

கட்டாகிரி, கனவுக்கும் நிஜத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடியாமல் இருந்தார். ‘நீங்கள் கண்ணால் பார்ப்பதெல்லாம் நிஜமாக இருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை.’ அவர் தனக்குத்தானே சத்தமாகச் சொல்லிக் கொண்டார்.

செவிலி சிரித்துக்கொண்டே அவரது நெற்றியிலிருந்த வியர்வையைத் துடைத்தாள். ‘தவளை மேல் உங்களுக்கு ரொம்பப் பிரியம். இல்லையா மிஸ்டர் கட்டாகிரி?’ என்றாள்.

மழை விட்டிருந்தது. இல்லை. அப்படித் தோன்றியது. தெருவில் ஒன்றிரண்டு தேநீர்க் கடைகள் திறந்திருந்தன. முன்னிருட்டு. பசித்தது.வானொலிக்கு முன் மக்கள் குழுமி நின்றுகொண்டு செய்திகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். டீக்கடை வாசலில் ஒரு பிச்சைக்காரக் கிழவி நடுங்கியபடி நின்று கொண்டிருந்தாள். இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகள் வாங்கிக்கொண்டு, தேநீர் குடித்துப் பசியைத் தணித்தேன்.டீக்கடைக் கோணிச் சாக்கு மறைவுக்குப்பின் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. மழை மீண்டும் தொடங்கியது. அத்துடன் காற்றும். பலமான காற்று. இன்னும் ஒரு நாள் மழை நீடிக்கும் என்றது வானொலி.

வீடு திரும்பினேன். இரவு முழுக்கக் குரைத்து, எங்கள் அப்துல்கலாம் நகர்  நாயொன்று நடுங்கிக்கொண்டு நாங்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் முடங்கிக் கிடந்தது. பிஸ்கெட் பாக்கெட்டில் பெரும்பகுதி நானும், மற்றதை நாயும் பகிர்ந்துகொண்டோம். தொடர்ந்து மனிதர் அல்லாதவர் தொடர்பான நினைவுகளாகவே வந்து கொண்டிருந்தன.  மழைக்குமுன் சுறுசுறுப்பாக அலைந்த எறும்புகள் இப்போது எங்கே போயிருக்கும். என்னவாகி இருக்கும். பேருந்து நிறுத்தத்தின் கீழே படுத்துக்கொண்டு ஒரு முற்றும் துறந்த ஞானியைப் போன்ற முகத் தோற்றத்துடன் அசை போட்டுக் கொண்டிருக்கும் திருவல்லிக்கேணி மாடுகள் என்ன செய்துகொண்டிருக்கும் புயல் மழையின்போது? குரங்காட்டிகளுக்குச் சோறு போடும் குரங்குகள், ஆறடி மனிதருக்குச் சம்பாதித்துக் கொடுக்கும் ஜோசியம் சொல்லும் கிளிகள்; மாதுளை மரத்துச் சிட்டுக் குருவிகள், எப்போதும் எங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் திருடி இராத காக்கைகள், இவைகள் எல்லாம் எங்கே எப்படி இருக்கின்றன?

கம்பனின் முயல் பற்றிய பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. மந்தரை, கைகேயியின் மனதைக் கெடுக்கிற சூழல். தசரதனுக்குப் பிறகு, பரதனைப் பட்டமேற்கச் செய்யவேண்டும் என்கிறாள் மந்தரை. கைகேயி, பரதனைக் காட்டிலும் அதிகமாக ராமனை நேசிக்கிற தாய். கைகேயி, மந்தரையிடம் சொல்கிறாள்:

வெயில் முறைக் குலக்கதிரவன் முதலிய மேலோர்

உயிர் முதல் பொருள் திறம்பினும் உளர திறம்பதோர்

மயில் முறைக் குலத்து உரிமையை மனு முதல் மரபைச்

செயிர் உற புலைச் சிந்தையால் என் சொனாய் தீயோய்…

(மந்தரை சூழ்ச்சிப்படலம் – 64.)

இதன் அர்த்தம்:

‘சூரிய குலத்துதித்த  மேலோர்கள், உயிரே போனாலும், நீதி உரை தவறாதவர்கள். இது மயில் முறை போல, உரிமை சார்ந்த விஷயம். மனுக்குலம் குற்றத்தால் தாழ்மையடையும்படி புன்மைக் குணமுள்ளவளே, என்ன சொன்னாய்?’ இது கைகேயி, மந்தரையிடம் வெகுண்டு சொன்னது. மூத்தவனுக்கே பட்டம் உரியது என்பதே முறை. இது மயில் முறை போன்றது என்று கைகேயி சொன்னதுக்கு என்ன அர்த்தம். பலரும் பல விளக்கங்களைச் சொல்கிறார்கள். பின்னால் வந்த தணிகைப் புராண ஆசிரியர் கச்சியப்ப முனிவர் விளக்கம் சொல்லி இருக்கிறார். மயில் குலத்துக்கே உரிய ஒரு தனித்தன்மை என்னவென்றால், மயில் முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்கும்போது, முதலில் பொரித்த குஞ்சின் கலாபத்துப் பீலி பொன்னிறம் படர்ந்திருக்கும். மற்ற குஞ்சுகளுக்குப் படராது. பீலி பொன்னிறம் வாய்ந்த மயிலே அக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் என்பது கச்சியப்ப முனிவரின் பாடல் பொருள். பாடல் வரிகள் இவை:

‘பலவாம் பொழிலின் ஒரு தாய் உயிர்த்த பல மயிற்கும்

கலவாம் புனைந்த களிமயில் மூத்ததெனக் கருதச்…’

பீலி பொன்னிறம் வாய்க்கப் பெற்ற மயில் ஆடத் தொடங்கிய பின்னால்தான் ஏனைய மயில்கள் ஆடத் துவங்கும் என்ற குறிப்பினையும் முனிவர் தருகிறார்.

(பறவை இயல் அறிஞர்கள் இது பற்றி அறிவியல் செய்திகள் வைத்திருக்கிறார்களா என்று எழுதினால் நாமும் அறிந்துகொள்ளலாம்) படிக்கப் படிக்க விஷயம் தெரிகிறதோஇல்லையோ, நம் அறியாமை தெரிகிறது, அல்லவா. மழைக் காலம், அறியாமை மறையும் காலம். இரவு கொஞ்சம் கம்பன் படித்தேன். இரு மெழுகுவர்த்திகள் வெளிச்சம் இருக்கும்வரை.

மறுநாள் வானம் வெளிவாங்கி இருந்தது. புயல் குழந்தைபோல ஆகிவிட்டிருந்தது. வெயில் வரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தது. தெருவில் குப்பை லாரிகள். மேலே மேலே அடுக்கப்பட்ட குப்பை, லாரியிலிருந்து வழிந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே ஆட்டோக்கள் காணப்பட்டன. குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடம் விடுமுறை. எப்போதும் விடுமுறை என்றால்தான் குழந்தைகள் முழு மகிழ்ச்சியடைவார்கள். காபி சாப்பிட்டுப் பக்கத்துப் பெட்டிக்கடையில் பேப்பர் வாங்குகையில் நண்பர் அரசியல் பேசினார். அம்மாள் ஆட்சி வந்தால் வானம் ஏகத்துக்குத் திறந்துவிடுகிறதாம். தமிழ்நாட்டுக்கு அது பொருந்தும் ஓய்! ‘நம் நாட்டை ஆள்வது ரங்கசாமிதானே?’ என்றேன். ‘மந்திரிகள் பத்தாம் கிளாஸ் பரீட்சை எழுதினால் புயல் வரும்’ என்றார். ‘எழுதினால்தானே?’ என்றேன்.

ண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய முயல் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு சோம்பேறித்தனமான மதிய வேளை. எஸ். ரா. வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. திறக்கிறார். ஒரு முயல். ‘உங்களுடன் பேச வந்திருக்கிறேன்’என்கிறது முயல். இருவரும் நாற்காலியில் அமர்ந்து பேசுகிறார்கள். ‘நீங்கள் ஈசாப்பின் முயல், ஆமை கதையைப் படித்திருக்கிறீர்களா?’ ‘நான் பள்ளிப் பருவத்திலேயே அதைப் படித்திருக்கிறேன்’ ‘பிறகு ஏன் அதைப் பற்றி எழுதவில்லை. ஒரு முயல் தூங்குகிறபோது, ஓர் ஆமை வெற்றி பெறுவது என்கிற கதை எங்கள் இனத்தை அவமானப்படுத்துகிறதே’ என்று உணர்ச்சியோடு சொல்லித் தொடர்கிறது. இரண்டாயிரத்து ஐநூறு வருஷத்துக்கு முந்தைய ஒரு குரங்கு, எங்கள் வம்சத்து முயலிடம், கேவலம் ஆமையிடம் பந்தயத்தில் தோற்றுவிட்டவர்கள்தானே நீங்கள் என்று சொல்லி எங்கள் முயல் குலத்தையே கேவலப்படுத்திவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க நான் புறப்பட்டு இருக்கிறேன். ஈசாப்பிடம் சென்று நியாயம் கேட்டேன். வேண்டுமானால் மீண்டும் ஒரு பந்தயம் நடத்துங்கள் என்றேன். கதையை மாற்றி எழுதச் சொன்னேன். அது ஓர் உருவகம் என்றார். நான் மறுகதை எழுத அவகாசம் கேட்டார். அதற்குள் ஈசாப் இறந்துபோனார். கிரேக்கத்தின் கவிகள், நாடகாசிரியர்கள் அனைவரையும் எங்கள் இன முயல்கள் சென்று புதுக்கதைக் கோரிக்கை விடுத்தன. போர்ஹேயையும் பார்த்தோம். அவர் அக்கதை ஒரு கணிதப் புதிர் என்றார். போர்ஹேவும் இறந்துபோனார். எங்களுக்காக யார் ஒரு புதுக்கதையை எழுதப் போகிறார்கள்? யாரை வைத்து மாற்றுக் கதை எழுதலாம்?’ என்று கேட்டபடியே முயல், எஸ். ராமகிருஷ்ணனுக்குப் பரிசாக ஒரு பழத்தைக் கொடுத்துவிட்டுப் பேருந்து நிலையம் நோக்கிச் சென்றது…

ங்கள் ஊரில் பாரதி தங்கி இருந்தபோது பெரும்புயல் ஒன்று அநேகமாக 1916ம் ஆண்டு வீசியது. இது தொடர்பாக அவரது கவிதைகள்- வசனங்கள் உங்களுக்கு நினைவு வர வேண்டும். இது பற்றி ஒரு கதை வழங்குகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், இது நடந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.பேசியும் எழுதியும் வருகிறேன்.

சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு சூரியனை மக்கள் பார்த்தார்கள். பெரும் சேதம். காடெல்லாம் விறகாச்சு. அரவிந்தர், மண்டயம் ஆச்சாரியார், வ.ரா. எல்லோரும் அரிசி, பருப்பு தண்டி மக்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கிக்கொண்டு சென்றார்கள். பாரதியும் ஐயரும் (வ.வெ.சு. ஐயர்) ஒரு பெரிய கூடையை எடுத்துக்கொண்டு தெருவில் விழுந்து கிடக்கும் செத்த பறவைகளைத் திரட்டி எடுத்துச் சென்று மனிதர்களை அடக்கம் செய்வது போல அடக்கம் செய்தார்கள்.

பாரதி இப்படிச் செய்திருப்பார் என்று நான் நம்புகிறேன். காக்கை குருவி எங்கள் சாதி என்றது அவரல்லவோ? அது வெறும் கவிதை வரி அல்லவே. அதுதானே பாரதியின் வாழ்க்கை நெறி.

(வருவார்கள்)

 

 

பின்னூட்டமொன்றை இடுக