2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்

2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
வள்ளியூரான்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு நடத்தும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,895 காலிப் பணியிடங்கள் உள்ள இந்தத் தேர்வு வரும் மே மாதம் 27ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் மொத்த காலிப் பணியிடங்களில் 2,859 பணியிடங்கள் முதுநிலை ஆசிரியர்களுக்கும் 36 காலிப் பணியிடங்கள் உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 பணியிடங்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், வணிகவியல், பொலிட்டிக்கல் சயின்ஸ், ஹோம் சயின்ஸ், இந்திய கலாசாரம், பிசிக்கல் எஜுக்கேஷன், தெலுங்கு, உருது உள்ளிட்ட பாடங்களைத் தேர்வு செய்த விண்ணப்பதாரர்கள் இந்தப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, அதே படிப்பில் முதுநிலைப் பட்டப் படிப்பும் படித்திருக்க வேண்டும். கூடவே பி.எட்., படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உடற்கல்வியில் இளநிலைப் பட்டப் படிப்பு, கூடவே அதே பாடத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்கலாம் அல்லது ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அதனுடன் உடற்கல்வி பாடத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்கலாம். ஆனால், பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாட அறிவை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

எழுத்துத் தேர்வு மதிப்பெண்களுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் பதிவு செய்த ஆண்டுகள் மற்றும் பணி முன் அனுபவம் போன்றவை கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. முதுநிலை ஆசிரியர் பணியில் ஓர் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு ஒரு மதிப்பெண்ணும் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் உள்ளவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 5 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு 3 மதிப்பெண்களும் அளிக்கப்படுகின்றன. அதேபோல வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு, பதிவு செய்து 5 ஆண்டுகள் வரை பதிவு மூப்பு பட்டியலில் காத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் வரை காத்திருந்தோருக்கு 3 மதிப்பெண்களும், 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோருக்கு 4 மதிப்பெண்களும் கூடுதலாக அளிக்கப்படும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். வயது வரம்பு 57 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை கல்வி அலுவலகங்களிலும் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 50. தேர்வுக் கட்டணம் ரூ. 500. எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.250.

இதற்கான எழுத்துத் தேர்வு மொத்தம் 3 மணி நேரம். மொத்த மதிப்பெண்கள் 150. முக்கியப் பாடத்திற்கு 110 மதிப்பெண்களும், எஜுகேஷனல் மெத்தடாலஜி பாடத்திற்கு 30 மதிப்பெண்களும், பொது அறிவுப் பாடத்திற்கு பத்து மதிப்பெண்களும் அளிக்கப்படுகின்றன. கேள்வித்தாள் முற்றிலும் அப்ஜக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. விடைத்தாளில் விடைக்கான வரிசை எண்களை நீலம் அல்லது கறுப்பு மை பால்பாயிண்ட் பேனாவினால் மட்டுமே நிழலிட வேண்டும். பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்ந்து எடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ஹால் டிக்கெட் அவரவர் முகவரிக்கு தேர்வுத் துறையால் அனுப்பப்படும். தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்புவரை ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில், தங்களின் தேர்வு மையம் மற்றும் பதிவு எண்களைத் தெரிந்துகொண்டு, சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு நேரடியாக சென்று ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: மார்ச் 30.

விவரங்களுக்கு: http://trb.tn.nic.in

பின்னூட்டமொன்றை இடுக