அமில நதியில் சில தாமரைப் பூக்கள்-மைத்ரேயி


சில வாரங்களுக்குமுன் பாகிஸ்தானில் தகவல்துறை அமைச்சராய் இருந்த பிர்தௌஸ், அழுதுகொண்டே தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் தன் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். ஆனால், சர்வதேச அளவில் இந்தக் கண்ணீர் ராஜினாமா எந்த சலசலப்பையும் ஏற்படுத்தவில்லை. பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் அரசியல் ஈடுபாடு என்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், அது உருக்குலைந்த கனவாய் ஆகும் போதும் எந்த எதிர்வினையும் இல்லாது போவது பெரும் கவலையை ஏற்படுத்தும் விஷயமாக உள்ளது.

இந்திய அரசியலிலும் பெண்களின் பங்கு எப்போதுமே கவலைக்கோ, விமர்சனத்திற்கோ காரணமாக இருந்திருக்கிறது. மாயாவதி முதல் ஜெயலலிதா வரை அவர்களின் அணுகுமுறை மிக இறுக்கமாக, அதிகாரக் கட்டமைப்பு சார்ந்ததாகவே இருக்கிறது. அதை விமர்சனம் செய்கிறவர்கள் பலர். ஆனால், அவர்களுக்கு ஏன் அத்தகைய மனநிலை என்று சிலரேனும் யோசித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

மாயாவதி ஆகட்டும் ஜெயலலிதா ஆகட்டும் இவர்கள் அப்படி இல்லாவிட்டால் என்ன ஆகும் எங்கிற ஒற்றைக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். பிர்தௌசின் கண்ணீர் ராஜினாமா மாதிரி இவர்களும் செய்ய நேரிட்டிருக்கலாம்.

பிர்தௌஸ் சிறப்பாக செயலாற்றவில்லை என்பதே அவர் மேல் கேபினட் அமைச்சர்கள்வைத்த குற்றச்சாட்டு. பெண்கள் திறனற்றவர்கள் என்பது ஒரு பொதுப்புத்தியின் வெளிப்பாடாக இருக்கிறது. உங்களுக்குத் தெரியாது  என்னும் மனோபாவத்திலேயே பெண்களைக் கையாளுவது அவர்கள் மனபலத்தைப் பாதிக்கும் செயல்.அப்படியொரு மன அழுத்தம் நடுவே பல நாள் புழங்கியதன் வெளிப்பாடே பிர்தௌசின் கண்ணீர். அமைச்சரின் நிலை மட்டுமல்ல, அன்றாடம் வேலைக்குப் போகும் பெண்களின் கதையும் அதுதான். பெரும்பாலான அலுவலக நிர்வாகங்கள், பெண் ஊழியர்களின் மனநிலையைக் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை.

சமீபத்தில் ஜெய்ப்பூர் இந்திய ராணுவப் பள்ளியின் தலமையாசிரியராய் இருக்கும் ராஜீவ் குமார் சிங், அங்கு பணியாற்றிய ஒரு பெண் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தியபோது ராஜீவுக்கு எதிராய் சாட்சிகள் இருந்தும் அவரைப் பணி நீக்கம் செய்யவில்லை. மாறாக, அந்தப் பெண்ணை பணிநீக்கம் செய்யப்பட்டார். இப்போது அந்தப் பெண், பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியிடம் புகார் செய்திருக்கிறார்.

இதில் திகைப்பூட்டும் விஷயம், புகாரை வாபஸ் வாங்க ராணுவ அதிகாரிகள் லஞ்சம் தர முன் வந்ததுதான். அதை ஏற்க முன் வராததால், விசாரணையின்போது அந்தப் பெண்ணை அவர்கள் விசாரிக்கும் முறையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு அழுத சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. பகிரங்கப்படுத்தப்படாத அதன் முடிவில் வழிந்த அந்தக் கண்ணீரின் சாட்சி போதும்,  விசாரணையில் எத்தனை முறை வார்த்தைகளால் பாலியல் வன்முறை நிகழ்ந்திருக்கிறது என்பது.

ஒரு நாளின் பரபரப்பான காலை நேரத்தில், பரபரப்பாய் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை எண்ணிடலடங்காதவை.அவர்களில் பலர், பெரிய பதவிகளில் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு இந்த சமூகம் அளித்திருக்கும் மரியாதை இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இவர்களை பெண் என்னும் பிம்பம் மீறி, மனுஷியாய் பார்க்கும் பார்வை மிகக் குறைவானதாகவே இருக்கிறது.

சாதாரணமாக அலுவலகங்களில் நான்கு ஆண்கள் சேர்ந்து பேசினால், அதில் பெண்களைப் பற்றின பேச்சு இல்லாமல் இருக்காது, அப்போது சகஜமாக ஃபிகர், சப்பை ஃபிகர், ஐட்டம் மாதிரியான வார்த்தைகள் புழங்கும் (இதில் வேறுபடும் ஆண்களும் உள்ளார்கள்). இந்த ஆண்களுக்கு மத்தியில் வேலை பார்ப்பதென்பது பெண்களுக்கு மிகுந்த வலி நிறைந்த ஒரு விஷயம்.

ஒரு பெண்ணிற்கு உயர் பதவி கிடைத்து விட்டால், அதைப் பெறத் தவறிய ஆணின் வாயில் வரும் முதல் வார்த்தை : எப்படி இவளுக்கெல்லாம் கிடைக்குனு தெரியாது? போகிற போக்கில் இறைத்து விட்டுப் போகும் அமிலம் தாண்டி, பெண்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவில் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில், அலுவலகப் பிரச்சினைகளைப் பெண்களில் இருபது சதவிகிதத்தினர் வெளியே சொல்வதில்லை என்று கணக்கிடப் பட்டிருக்கிறது. பெண்களின் மனவெளியைப் பற்றி அதிகம் அக்கறை இல்லாத இந்தியாவில் இந்தக் கணக்கெடுப்பு நிகழ்த்தப் படுமானால், அலுவலக மனக் கசப்புகளை வெளியேசொல்லாத பெண்கள், எண்பது சதவிகிதத்துக்கு மேலிருப்பார்கள்.

ஒவ்வொரு அலுவலகத்திலும் பெண்களின் புகார்களை விசாரிக்க ஒரு குழு இருக்க வேண்டும் என்பது இந்தியப் பெண்கள் ஆணையம் வலியுறுத்தும் விஷயம். இப்படி ஒரு குழு இருக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையும் கூட. அப்படி இங்கு எந்த அலுவலகத்தில் இருக்கிறது? ஒரு முறை எனக்கு அதிகாரியாய் இருந்த ஒருவன், கடக்கும் போதெல்லாம் அசிங்கமாய்ப் பேச, அவனை எதிர்த்து தலைமை அலுவலகத்தில் புகார் செய்தேன். தலைமை அதிகாரியை உடனடியாக சென்னையில் சந்தித்து, சரக்கு வாங்கிக் கொடுத்து அந்தப் புகாரை விசாரிக்காமலே செய்து விட்டான்.

பெண்களை இப்போதெல்லாம் நிறைய கம்பெனிகளில் வேலை செய்ய தேர்ந்தெடுப்பதற்கு காரணம், அவர்கள் வேலை நேரத்தில் சிகரெட் பிடிக்கவோ, டீ சாப்பிடவோ அதிகம் வெளியே போக மாட்டார்கள் என்பதால் என்று, ஒரு டீக்கடையில் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டேன், அவர்களின் பேச்சு ஒட்டுமொத்தமாய் பெண்களின் திறனை புறக்கணித்தது.

வெறும் பொருளாதாரத் தேவைக்காக மட்டுமின்றி, தன் திறன் மீதான நம்பிக்கையின் பொருட்டும் பெண்கள் தங்களை பணி செய்யும் இடத்தில் நிலைநிறுத்தினால் மட்டுமே அவர்கள், அவர்களாகவே இருத்தல் இயலும். தன்னை சாய்த்து விடும் ஆண்கள் குறித்த மன அழுத்தமற்று இருத்தலும் அப்போதே சாத்தியப்படும்.

(ஓடும்)

பின்னூட்டமொன்றை இடுக