Archive for the ‘கல்வி’ Category

ஆசிரியர் தகுதி தேர்வு : 22ம் தேதி முதல் விண்ணப்பம்

சென்னை, மார்ச் 7 : தமிழகத்தில்  வரும் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 22ம் தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.

 

 

ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ஏற்கனவே ஆசிரியராக பணியில் இருப்பவர்களுக்கும், ஆசிரியர் படிப்பு முடித்தவர்களுக்கும் வசதியாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

 

 

மாநில அளவிலும், மத்திய அளவிலும் இத்தேர்வுகள் நடத்தப்படும். மாநில அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜுன் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, அதனுடன் இணைந்துள்ள செல்லானை பூர்த்தி செய்து ஸ்டேட் பாங்கில் ரூ.500 செலுத்த வேண்டும்.

இது ஒரு அபத்தமான கல்விமுறை: கல்வி திட்ட அதிகாரி-02-02-2012

சேலம்: இதுவரைக்கும், நம் கல்விமுறை, மாணவ, மாணவியருக்கு சரியான உற்று நோக்கலை தரவில்லை.

பனைமரத்தில் ஆண், பெண் என, இரு பிரிவு உண்டு என்பதையும், அதை எப்படி அடையாளம் காண்பது என்பதையும், மாணவர்களுக்கு கற்றுத் தரவில்லை. ஆனால், அதற்கு பதில் பனைமரத்துக்கான பொட்டானிக்கல் பெயர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் என, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் கார்மேகம் பேசினார்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் சார்பில், மாநில அளவில் அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், சேலம் ஜெய்ராம் கல்லூரியில் நடந்தது.

இதில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இணை இயக்குனர் கார்மேகம் பேசியதாவது:

இங்கு ஒரு தடவை சிறப்புத் தமிழ் பாடத்தை எடுத்துவிட்டால், கடைசி வரை தமிழைப் படித்துதான் சாக வேண்டும்; அப்புறம் மாற்றிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையெல்லாம் உடனடியாக மாறாது.

மேல்நிலைக் கல்வியில் மாணவர் விரும்பிய குரூப் கொடுப்பதற்கும், 10ம் வகுப்பு மதிப்பெண்ணே அடிப்படையாக உள்ளது. இதனால் மாணவனுக்கு பிடித்த பாடம் ஒன்றாகவும், நாம் வழங்கும் பாடம் ஒன்றாகவும் உள்ளது. 450 மதிப்பெண் எடுத்தவர்கள் தமிழ் இலக்கியம் படிக்க விரும்பலாம். 250 மதிப்பெண் எடுத்தவர்கள் கணிதப் பாடத்தையும் விரும்பலாம்.

ஆனால், இதற்கெல்லாம், நமது தேர்வுக் குழு அனுமதிப்பதில்லை. இங்கு ஒரு தடவை சிறப்பு தமிழ் பாடத்தை எடுத்துவிட்டால், கடைசி வரை தமிழைப் படித்துதான் சாக வேண்டும்; அப்புறம் மாற்றிக் கொள்ளவே முடியாது. இந்த நிலையெல்லாம் உடனடியாக மாறாது. எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் போடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். என்னைக் கேட்டால், பி.எச்டி., வரை ஆல் பாஸ் போட வேண்டும் என்பேன். கல்வி ஒரு அனுபவமாக இருக்க வேண்டும். ஒரு கப்பலில் பயணித்தால், அதில் உள்ள அனைவரும் அடுத்த கரைக்கு செல்ல வேண்டும். அதில் சிலரை நடுவில் தூக்கி எறிவது, எந்த விதத்திலும் நியாயமாகாது.

இன்று நாட்டில் மிகப்பெரிய அதிகார சக்தியாக விளங்குவது அரசியல். அதற்கு அடுத்து, பணபலம் மிக்கவர்களாக தொழிலதிபர்கள். இந்த இரண்டிலும் இருப்பவர்கள், நம்மிடம் நல்ல மதிப்பெண் பெற்றவர்களா? நல்ல மதிப்பெண்ணுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. நமது கல்வி முறையிலும் மாபெரும் பிரச்னைகள் உள்ளன. பத்தாம் வகுப்பில் மாணவனை, படி,படி என விரட்டிவிட்டு, 11ல் ப்ரீயாக விட்டு விடுகிறோம்.

மீண்டும், 12ம் வகுப்பில் விரட்டுகிறோம். அதேபோல், பிளஸ் 2 பாடம், ஒரு கல்வியாண்டுக்காக, அதாவது ஜூனில் ஆரம்பித்து, மார்ச் வரை நடத்த தயாரிக்கப்பட்டது. பத்து மாதத்துக்கு புத்தகம் எழுத வேண்டியது. பின் அதை, ஆறு மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டியது; அதையும் அபிஷியலாகவே முடிக்கிறோம், அதுதான் வேடிக்கை. நீதிமன்றத்தில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியுமா? எவ்வளவு பைத்தியக்காரத்தனம் பாருங்கள். இதையெல்லாம் மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் ஆசிரியர்கள், தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, சேலம் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.