Posts Tagged ‘கல்வி’

ஆசிரியர் தகுதி தேர்வு : 22ம் தேதி முதல் விண்ணப்பம்

சென்னை, மார்ச் 7 : தமிழகத்தில்  வரும் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 22ம் தேதி முதல் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.

 

 

ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, ஏற்கனவே ஆசிரியராக பணியில் இருப்பவர்களுக்கும், ஆசிரியர் படிப்பு முடித்தவர்களுக்கும் வசதியாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

 

 

மாநில அளவிலும், மத்திய அளவிலும் இத்தேர்வுகள் நடத்தப்படும். மாநில அளவிலான ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜுன் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து, அதனுடன் இணைந்துள்ள செல்லானை பூர்த்தி செய்து ஸ்டேட் பாங்கில் ரூ.500 செலுத்த வேண்டும்.

2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்

2,895 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
வள்ளியூரான்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு நடத்தும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வை தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மொத்தம் 2,895 காலிப் பணியிடங்கள் உள்ள இந்தத் தேர்வு வரும் மே மாதம் 27ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் மொத்த காலிப் பணியிடங்களில் 2,859 பணியிடங்கள் முதுநிலை ஆசிரியர்களுக்கும் 36 காலிப் பணியிடங்கள் உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 பணியிடங்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், வணிகவியல், பொலிட்டிக்கல் சயின்ஸ், ஹோம் சயின்ஸ், இந்திய கலாசாரம், பிசிக்கல் எஜுக்கேஷன், தெலுங்கு, உருது உள்ளிட்ட பாடங்களைத் தேர்வு செய்த விண்ணப்பதாரர்கள் இந்தப் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு, அதே படிப்பில் முதுநிலைப் பட்டப் படிப்பும் படித்திருக்க வேண்டும். கூடவே பி.எட்., படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடற்கல்வி இயக்குநர் கிரேடு-1 பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உடற்கல்வியில் இளநிலைப் பட்டப் படிப்பு, கூடவே அதே பாடத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்கலாம் அல்லது ஏதேனும் ஓர் இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அதனுடன் உடற்கல்வி பாடத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பு படித்திருக்கலாம். ஆனால், பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாட அறிவை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

எழுத்துத் தேர்வு மதிப்பெண்களுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாணவர்கள் பதிவு செய்த ஆண்டுகள் மற்றும் பணி முன் அனுபவம் போன்றவை கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. முதுநிலை ஆசிரியர் பணியில் ஓர் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு ஒரு மதிப்பெண்ணும் 5 ஆண்டுகள் வரை முன் அனுபவம் உள்ளவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 5 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு 3 மதிப்பெண்களும் அளிக்கப்படுகின்றன. அதேபோல வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு, பதிவு செய்து 5 ஆண்டுகள் வரை பதிவு மூப்பு பட்டியலில் காத்திருப்பவர்களுக்கு 2 மதிப்பெண்களும், 10 ஆண்டுகள் வரை காத்திருந்தோருக்கு 3 மதிப்பெண்களும், 10 ஆண்டுகளுக்கு மேல் காத்திருந்தோருக்கு 4 மதிப்பெண்களும் கூடுதலாக அளிக்கப்படும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ளவேண்டும். வயது வரம்பு 57 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை கல்வி அலுவலகங்களிலும் கிடைக்கும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 50. தேர்வுக் கட்டணம் ரூ. 500. எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் ரூ.250.

இதற்கான எழுத்துத் தேர்வு மொத்தம் 3 மணி நேரம். மொத்த மதிப்பெண்கள் 150. முக்கியப் பாடத்திற்கு 110 மதிப்பெண்களும், எஜுகேஷனல் மெத்தடாலஜி பாடத்திற்கு 30 மதிப்பெண்களும், பொது அறிவுப் பாடத்திற்கு பத்து மதிப்பெண்களும் அளிக்கப்படுகின்றன. கேள்வித்தாள் முற்றிலும் அப்ஜக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது. விடைத்தாளில் விடைக்கான வரிசை எண்களை நீலம் அல்லது கறுப்பு மை பால்பாயிண்ட் பேனாவினால் மட்டுமே நிழலிட வேண்டும். பாடத்திட்டங்கள் குறித்த விவரங்கள் ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்ந்து எடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் ஹால் டிக்கெட் அவரவர் முகவரிக்கு தேர்வுத் துறையால் அனுப்பப்படும். தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்புவரை ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வாணைய இணையதளத்தில், தங்களின் தேர்வு மையம் மற்றும் பதிவு எண்களைத் தெரிந்துகொண்டு, சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு நேரடியாக சென்று ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: மார்ச் 30.

விவரங்களுக்கு: http://trb.tn.nic.in

சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் – ஒரு பார்வை

சி.பி.எஸ்.இ கல்விமுறையில் தங்களது பிள்ளைகள் படிப்பதை பெருமையாக கருதும் பெற்றோர்கள் மிக அதிகம். அதனால் எதிர்கால வாழ்வு வளம்பெறும் என்ற எண்ணமும் வலுவாக உள்ளது. எனவே, அந்த சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்வது பலருக்கும் நல்லதுதானே! இக்கட்டுரை அதற்கான அலசலை மேற்கொள்கிறது.

சி.பி.எஸ்.இ என்ற கல்வி வாரியம், இன்றைய நிலையை அடைவதற்கு முன்பாக பல மாற்றங்களைக் கண்டுள்ளது. கடந்த 1921ம் ஆண்டு, முதன்முதலாக, உயர்நிலைப் பள்ளி மற்றும் இண்டர்மீடியேட் கல்விக்கான U P வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ராஜ்புதனா, மத்திய இந்தியா மற்றும் குவாலியர் ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்த வாரியம் இயங்கியது. 1929ம் ஆண்டு, அப்போதைய இந்திய அரசாங்கம், உயர்நிலைப் பள்ளி மற்றும் இண்டர்மீடியேட் கல்வி, ராஜ்புதனா, என்ற பெயரில், அனைத்துப் பகுதிகளுக்குமான ஒரு கல்வி வாரியத்தை ஏற்படுத்த பரிந்துரைத்தது. இந்த வாரியமானது, ஆஜ்மீர், மார்வார், மத்திய இந்தியா மற்றும் குவாலியர் ஆகிய பகுதிகளில் இயங்கத் தொடங்கியது.

இந்தக் கல்விமுறையை, உயர்நிலைக் கல்வி நிலையில் பரவலாக பயன்படுத்தியதால், கல்வி நிறுவனங்களின் கல்வி செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் பல பல்கலைக்கழகங்களும், பல பள்ளிக் கல்வி வாரியங்களும் தோன்ற ஆரம்பித்த காலங்களில், இந்த வாரியத்தின் செயல்பாடு ஆஜ்மீர், போபால் மற்றும் விந்தியப் பகுதிகள் ஆகியவற்றில் மட்டுமே இருந்தது. இந்நிலையில், கடந்த 1952ம் ஆண்டு, இதன் செயல்பாடு C மற்றும் D பிரிவைச் சேர்ந்த பகுதிகளிலும் விஸ்தரிக்கப்பட்டது.

அப்போதுதான் இந்த வாரியத்திற்கு CBSE என்ற பெயரும் வந்தது. மேலும், 1962ம் ஆண்டில்தான் இந்த வாரியம் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. கல்வி நிறுவனங்களுக்கு சிறந்த முறையில் உதவி புரிவது மற்றும் அடிக்கடி பணி மாற்றல்களுக்கு உள்ளாகும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுடைய கல்வித் தேவைகளை ஈடுசெய்தல் போன்றவை இந்த வாரியத்தின் முக்கிய நோக்கங்கள்.

வாரியத்தின் இன்றைய செயல்பாட்டு எல்லை

இந்த வாரியத்தின் இன்றைய செயல்பாட்டு எல்லையானது, தேசிய மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து வியாபித்துள்ளது. இந்தக் கல்வி வாரியத்தை மறுஉருவாக்கம் செய்ததால், அப்போதைய Delhi Board of Secondary Education, மத்திய வாரியத்துடன் இணைக்கப்பட்டது. இதனால், டெல்லி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும், மத்திய வாரியத்தின் அங்கங்கள் ஆயின. பின்னர், சண்டிகர், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஜார்க்கண்ட், உத்ரகாண்ட் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய இடங்களிலுள்ள அனைத்துப் பள்ளிகளும், இந்த வாரியத்தின் அங்கீகாரத்தைப் பெற்றன.

கடந்த 1962ம் ஆண்டு வெறும் 309 பள்ளிகளைக் கொண்டிருந்த இந்த வாரியம், 31-03-2007 காலகட்டம் வரை, 8979 பள்ளிகளைக் கொண்டிருந்தது. இவற்றில், 21 வெளிநாடுகளிலுள்ள 141 பள்ளிகளும் அடக்கம். மற்றபடி, 897 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், 1761 அரசுப் பள்ளிகளும், 5827 தனி பள்ளிகளும், 480 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளும் மற்றும் 14 மத்திய திபெத்தியன் பள்ளிகளும் அடங்கும்.

நிர்வாகப் பிரிவுகள்

இந்த வாரியத்தின் செயல்பாட்டை செம்மைப்படுத்தி, நாடெங்கும் பரந்திருக்கும் பள்ளிகளின் தேவையை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கு, இந்த வாரியத்தின் பல பிராந்திய அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த வாரியத்தின் பிராந்திய அலுவலகங்கள், டெல்லி, அலகாபாத், சென்னை, ஆஜ்மீர், குவஹாத்தி மற்றும் பன்ச்குலா போன்ற இடங்களில் உள்ளன. இந்தியாவிற்கு வெளியே இருக்கும் CBSE பள்ளிகள், டெல்லியிலுள்ள பிராந்திய அலுவலகத்தால் கவனிக்கப்படுகின்றன.

பிராந்திய அலுவலகங்களுக்கென்று குறிப்பிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அதன் செயல்பாடுகள், தலைமை அலுவலகத்தால் கண்காணிக்கப்பட்டு, முறைப்படுத்தப்படுகின்றன. கொள்கை ரீதியிலான முடிவகள் அனைத்தும், தலைமை அலுவலகத்துடன் கலந்துரையாடியே எடுக்கப்பட முடியும். மற்றபடி, அன்றாட நிர்வாகங்கள், பள்ளிகளுடனான தொடர்புகள் மற்றும் தேர்வுக்கு முந்தைய மற்றும் பிறகான ஏற்பாடுகள் உள்ளிட்ட செயல்பாடுகளை, பிராந்திய அலுவலகங்களே கையாளும்.

நிதி கட்டமைப்பு

CBSE வாரியம் ஒரு சுயநிதி அமைப்பு. அடிக்கடி ஏற்படும் செலவினங்கள் மற்றும் எப்போதாவது ஏற்படும் செலவினங்கள் ஆகியவற்றுக்கான நிதியை, மத்திய அரசு அல்லது வேறு எந்த ஆதாரங்களிலிருந்தும் இந்த வாரியம் பெறுவதில்லை. அனைத்துவித நிதி தேவைகளும், வருடாந்திர தேர்வு கட்டணங்கள், அங்கீகார-இணைப்பு கட்டணங்கள், PMT(Pre Medical Test) -க்கான சேர்க்கை கட்டணம், ஏஐஇஇஇ தேர்வுகள் மற்றும் வாரிய வெளியீடுகள் ஆகியவற்றிலிருந்தே திரட்டப்படுகின்றன.

பிரதான நடவடிக்கைகள் மற்றும் நோக்கங்கள்

* பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளை நடத்துதல் மற்றும் அத்தேர்வு நடைமுறைகளை உருவாக்குதல். அத்தேர்வுகளில் தேறிய இணைப்பு பள்ளிகளின் மாணவர்களுக்கு, தகுதி சான்றிதழ்களை வழங்குதல்.

* அடிக்கடி பணிமாற்றத்திற்கு உள்ளாகும் பெற்றோர்களுடைய குழந்தைகளின் கல்வித் தேவைகளை நிறைவுசெய்தல்.

* நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், தேர்வுகளுக்காகவும், கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இணைத்துக் கொள்ளுதல்.

பிரதானப் பணிகள்

* மாணவர் நலன் சார்ந்த மற்றும் மாணவர்களை மையப்படுத்திய கற்பித்தல் திட்டங்களை உருவாக்குதல்.

* தேர்வு மற்றும் திருத்துதல் செயல்முறைகளை சீர்திருத்துதல்

* பணி தொடர்பான மற்றும் பணித் திறன்கள் இணைந்த கற்றல் முறைகளை பயன்படுத்தல்.

* பயிற்சி திட்டங்கள் மற்றும் பயிற்சி பட்டறைகளை தொடர்ச்சியாக செயல்படுத்தி, இந்த வாரியத்தின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் திறனை மேம்படுத்தல்.